| ADDED : ஏப் 27, 2024 12:29 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், 250முதல், 300 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மாதத்திற்கு, 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுகின்றனர். கர்ப்பியர், மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் என ஆரம்ப சுகாதார நிலையம் எப்போதும் நெரிசலுடன் இருக்கிறது.கட்டடத்தின் உள்பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் இடநெருக்கடியில் நோயாளிகள், அவர்களுடன் உறவினர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்கள் வெளி வளாகத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கூடுதல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சுகாதார நிலையத்தின் முகப்பு பகுதி முழுதிற்கும் கூரை அமைத்திட வேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. இதனால், மழை, வெயில் காலங்களில் சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:மழை காலங்களில் சாரல் சுகாதார நிலைய கட்டத்திற்குள் வருகிறது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முகப்பு பகுதியில் தேவையான இடவசதி இருந்தும் கூரை அமைக்கப்படாமல் உள்ளது.தற்போது வெயிலில் மக்கள் தவிப்பதால், கூரை அமைப்பது மிகவும் அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.