| ADDED : ஜன 16, 2024 11:35 PM
கும்மிடிப்பூண்டி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பரத்மாலிக், 28, வித்துராமாலிக், 25, சத்தியதத் மாலிக், 22. கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரத்தில் தங்கி, சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 14ம் தேதி இரவு, மூவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பரத்மாலிக் தலையில் கல்லை போட்டு, இருவரும் கொலை செய்தனர். அதன்பின், ஒடிசா மாநிலத்திற்கு இருவரும் தப்பிச் சென்றனர்.ஒடிசா சென்ற இருவரும், மதுபோதையில் பரத்மாலிக்கின் உறவினரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஒப்பந்ததாரர், நேற்று அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் பரத்மாலிக் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீசார், தனிப்படை அமைத்து, தப்பியோடிய இருவரையும் பிடிக்க ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.