உடுமலை;திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்கள், தேர்தல் விதிமுறை மற்றும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.லோக்சபா தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள், தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.திருமண மண்டபங்களில், தனி நபரால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் போலீசாருக்கு எழுத்து பூர்வமாக உரிய அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும்.திருமண மண்டபங்களில், அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கூடாது. மீறி நடந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீதும், அரசியல் கட்சியினர் மீதும் தேர்தல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்ககூடாது.திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறினால், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்:அச்சக உரிமையாளர்கள் அச்சிடும் நோட்டீஸ்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மற்றும் இதர இனங்களில், அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி, விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் அச்சடிக்கப்பட்ட விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும்.ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தனி நபர்களை இழிவு படுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது.மேலும், அச்சடிக்கப்பட்டவற்றின், 10 நகல்களை, வெளியிடுபவரின் உறுதிமொழியுடன், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும்.அச்சிடப்படும் நோட்டீஸ்கள், விளம்பரங்கள் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றின் ஒரு பிரதி, எண்ணிக்கை மற்றும் பில் விபரங்களை அலுவலகத்தில் வைத்திருக்க வேண்டும்.தேர்தல் நடைமுறைகளை, திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.