விவசாயம், தொழில் வளர்ச்சியில் மனித குல வளர்ச்சிக்கு, பல்லுயிர்ச் சூழல் முக்கியம்; இதை உருவாக்கும் ஆற்றல் பறவைகளுக்கே உண்டு. நுங்கும் நுரையுமாக அன்று பொங்கி வந்த நல்லாற்று நீரையும், அதன் கரைகளிலும் வளர்ந்திருக்கும் புல், புதர், செடி கொடிகளை வாழ்வாதாரமாக கொண்டும் எண்ணற்ற பறவையினங்கள் திருப்பூரில் வசித்தன. இன்று நல்லாறின் கோலம் மாறியிருக்கிறது. இருப்பினும், நானுாறு ஏக்கர் பரப்பிலான நஞ்சராயன் குளம், இன்றளவும், நல்லாறு நீரால் நிரம்பி ததும்புகிறது. ஐநுாறு ஆண்டுகள் முன், பாசனத்துக்காக கட்டப்பட்டது இந்தக்குளம்; ஆண்டு முழுக்க நீர் வரத்து இருப்பதால், எண்ணற்ற உள்நாட்டு பறவைகள் அங்கு தஞ்சம் புகுந்தன. பல்லாயிரம் கி.மீ. கடல் கடந்து வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வலசை வருகின்றன. இதுவரை, 192 வகை உள்நாட்டு பறவை, 45 வகை வெளிநாட்டு பறவைகள், நஞ்சராயன் குளத்துக்கு வந்து சென்றதாக கணக்கெடுப்பு சொல்கிறது. பறவைகளின் வாழ்விடமாக இக்குளம் மாறியதன் விளைவு, கடந்த, 2022ல், தமிழகத்தின், 17வது பறவைகள் சரணாலயமாக, நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு உலகளவிய நாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தப்படி, ஈர நிலத்திற்கான 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது, இந்திய அளவில், 85வது; தமிழக அளவில், 18வது 'ராம்சர்' நிலம் என்பது சிறப்பு.\ பறவைகள் சரணாலயமாகத் திகழும் நஞ்சராயன் குளம். பாதுகாப்பு வளையம் நஞ்சராயன் குளம் மட்டுமின்றி, நல்லாற்று வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் முழுக்க பறவைகளைப் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் நன்னீர் பாய்ந்த நல்லாற்றில், குளித்தும், மீன் பிடித்தும் மக்கள் மகிழ்ந்திருக்கின்றனர். தற்போது நல்லாறு நீர் மாசுபட்டிருப்பினும், பறவைகளின் வருகை தொடர்கிறது. சரணாலய அந்தஸ்து என்பது, பாதுகாப்பு வளையம் போன்றது. சட்ட விரோத செயல்கள் உட்பட சரணாலய பகுதியை சேதப்படுத்தும் எவ்வித செயலும் நடக்காது; அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. உலகளாவிய 'ராம்சர்' அங்கீகாரம் என்பது, கூடுதல் பாதுகாப்பு. இக்குளம் அமைந்துள்ள பகுதியில் எந்தவொரு காலத்திலும், எந்தவொரு மேம்பாடு மற்றும் கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது; இயற்கைக்கு எதிரான சிதைவை ஏற்படுத்த முடியாது. மாறாக, நஞ்சராயன் குளம், பறவைகளின் வாழ்விடமாக மட்டுமே இருக்க முடியும். இவையெல்லாம் நிகழ, நல்லாறு ஒரு முக்கிய காரணம். நல்லாற்று நீர் வழித்தடங்களில் அடைபட்டுள்ள புதர், தடை ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்தால் தான் நஞ்சராயன் குளத்துக்கு தண்ணீர் தடையின்றி வரும். - ரவீந்திரன் காமாட்சி, தலைவர், திருப்பூர் இயற்கைக்கழகம். பறவைகள் ஏன் வேண்டும்? பறவைகளின் மகரந்த சேர்க்கையால் தான் தாவரங்கள் வளர்கின்றன. பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை உணவாக்கி, பயிர்களை காக்கிறது. விதைகளை உண்டு, எச்சத்தின் வழியே வறண்ட நிலத்திலும் மரம், செடி, கொடி முளைக்க செய்கிறது. எலி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளால், அத்தகைய சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கும். வனம் மற்றும் அடர்ந்த புதர்களில் இறந்து கிடக்கும் பறவை, விலங்கினங்களை உண்ணும் கழுகு போன்ற பறவைகளால், அந்த இடம் துாய்மையாகி, நோய் தொற்று வராமல் தடுக்கப்படும்.---