| ADDED : நவ 25, 2025 06:44 AM
திருப்பூர்: அவிநாசி - அவிநாசிபாளையம் என்.எச். 381 ரோடு திருப்பூர் நகரப் பகுதியைக் கடந்து செல்கிறது. இந்த ரோட்டில் கே.செட்டிபாளையம் பகுதியில் ரோடு ஏற்ற இறக்கமாக அமைந்துள்ளது. மேலும் தார் ரோடு வழுவழுப்பாக லேசான துாறல் மழை விழுந்தால் கூட வாகனங்கள் தடுமாறும், சறுக்கும் அபாயம் உள்ளது. கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப்பிலிருந்து டி.பி.என். கார்டன் வரை இந்த ரோடு வளைவாகவும், குறுகலாகவும் உள்ளது. இந்த ரோட்டில் வாகன விபத்துகளை தவிர்க்க மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் தொலைதுார பஸ்கள், சரக்கு லாரிகள் வளைவாக உள்ள இடத்தில் நிலைதடுமாறி மையத்தடுப்பு மீடியன் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அவ்வகையில், இதுவரை ஏராளமான விபத்துகள் இந்த இடத்தில் நடந்துள்ளது. நேற்று அதிகாலை திருப்பூர் நோக்கி வந்த ஒரு பஸ் மையத்தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வந்த அரசு பஸ் அதன் பின்புறம் மோதியது. அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இருப்பினும் பெரும் அவதி ஏற்பட்டது. கவுன்சிலர் மனு நேற்று அதிகால, 4:00 மணியளவில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் அறிந்து கவுன்சிலர் காந்திமதி உடனடியாக அங்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தார். விபத்து காரணமாக ஏற்படும் அவதிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கு மனு அளித்தார். இப்பகுதியில் ரோடு வழுவழுப்பாக இருப்பதை சரி செய்ய வேண்டும்; வேகத்தடை அமைக்க வேண்டும்; விபத்து பகுதி என்பற்கான எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ரோடு குறுகல் மற்றும் வளைவை சரி செய்யும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.