உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுங்கச் சாவடிக்கு வலுக்கும் எதிர்ப்பு; 27ல் கடையடைப்புக்கு அழைப்பு லோக்சபா தேர்தல் நேரத்தில் பரபரப்பு

சுங்கச் சாவடிக்கு வலுக்கும் எதிர்ப்பு; 27ல் கடையடைப்புக்கு அழைப்பு லோக்சபா தேர்தல் நேரத்தில் பரபரப்பு

திருப்பூர்;வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்படுவதன் வாயிலாக, திருப்பூர் நகரை மையப்படுத்தி இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்' என தெரிவித்துள்ள சுங்கச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர், இதனை கண்டித்து, கடையடைப்பு, பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் இடைப்பட்ட, 32 கி.மீ., ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை வசமிருந்து, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, 'என்.எச்.,381' என்ற பெயரில் பராமரிக்கப்பட உள்ளது.இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்க, பொங்கலுார் ஒன்றியம், வேலம்பட்டியில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதற்கு, அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்பினர், வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'சுங்கச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு' என்ற அமைப்பையும் உருவாக்கினர். 'சுங்கம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்' என மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் வற்புறுத்தியதன் விளைவாக, சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கூட்டமைப்பினர் அறிக்கை:திருப்பூர் வட்டார பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் இச்சாலையை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவர்.வரும் நாட்களில் வாகன சுங்க கட்டணம் செலுத்தும் முறை, ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக இணைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சுங்கச்சாவடி எல்லையில், 2 கி.மீ., எல்லைக்குள் வாகனங்கள் வந்தாலே, கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வரும்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன், தாராபுரம் ரோட்டுக்கு சென்றாலோ, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அவிநாசி நோக்கி சென்றாலோ சுங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை இச்சாலையை கடக்கும் போதும், வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் எடுக்கப்படும் நிலை உருவாகும்.எனவே, வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 27ம் தேதி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது; அன்றைய தினம், கடையடைப்பு நடத்தி, வியாபாரிகள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி