உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / இந்தியர்களை ஒருங்கிணைத்த விழா ராமர் கோவில் கும்பாபிஷேகம் : வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் பெருமிதம்

இந்தியர்களை ஒருங்கிணைத்த விழா ராமர் கோவில் கும்பாபிஷேகம் : வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் பெருமிதம்

வேலுார் : ''இந்தியர்கள் அனைவரையும், ஒருங்கிணைத்த விழாவாக, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அமைந்தது,'' என, விழாவை நேரில் பார்த்த, வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் கூறினார்.உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் ராமரை தரிசனம் செய்தனர். இது குறித்து, வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் கூறியதாவது: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நானும், என் மனைவி அனுஷாவும் சென்றோம். விழாவில் பங்கேற்போரின் விபரங்கள் குறித்து, 2 மாதங்களுக்கு முன்பே, அவர்களின் ஆதார் மற்றும் அடையாள அட்டை முன்கூட்டியே பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது. அந்த பரிசோதனையை கூட, யாரிடமும் பகிர முடியாத அளவிற்கு, அறிவியல் தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்க, கடந்த, 20ம் தேதி லக்னோ விமான நிலையம் சென்றடைந்தவுடன், விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, எங்களது ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டையை பரிசோதனை செய்தனர். அப்போது, விழாவிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிப்பதை, பரிசோதனை செய்து உறுதி செய்தனர். பின்னர், அங்கிருந்து அயோத்திக்கு காரில் புறப்பட்டோம். அதே வேளையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திலிருந்து, எங்களுக்கு மொபைல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதில், 'உங்களுக்கு உதவி ஏதாவது தேவையா, தங்குவதற்கு இடம், வேறு வகையில் உதவி ஏதாவது தேவையா' என, கேட்டனர். எங்களுக்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்ததால், உதவி எதுவும் தேவை இல்லை என தெரிவித்தோம். மேலும், ஏதாவது உதவி தேவை என்றால், தொடர்பு கொள்ளுங்கள் என பணிவாக தெரிவித்தனர். பின்னர், விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டவர்களின் கார்கள் மட்டும், லக்னோவிலிருந்து அயோத்திக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்டன. அதன்படி, எங்கள் கார் அனுமதிக்கப்பட்டு, லக்னோவிலிருந்து, அயோத்தி சென்று கொண்டிருந்தோம். இதில் லக்னோவிலிருந்து, அயோத்தி வரை செல்லும், 150 கி.மீ., துாரமும், வழி நெடுகிலும், விழாக்கோலம் பூண்டிருந்தது. செல்லும் சாலையின் இரு பக்கமும், காவி கொடி கட்டப்பட்டு காவி மயமாக காட்சி அளித்தது. இரு பக்கமும் ராமர் படம் போட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைகள் துாய்மையாக, கண்ணாடி போல் பளிச்சிட்டு காணப்பட்டது. வழி நெடுகிலும், பக்தர்கள் ராமர் பாடல்களை பாடியவாறு இருந்தனர். வழியில் போக்குவரத்து எவ்வித இடையூறும் இல்லாமல், மிகுந்த மரியாதையுடன் வாகனம் செல்ல அனுமதித்தனர்.விழாவில், அனைத்து மாநில தொடர்பான கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இதில், தமிழகத்தில் பிரபலமான பொய்க்கால் குதிரை ஆட்டமும் இடம் பெற்றிருந்தது. வட மாநிலத்தவரே இந்த கலைநிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதில், 8,000 பேர் பங்கேற்றனர். இங்கு எந்த அரசியல்வாதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. கடும் குளிராக இருந்தாலும், அதையெல்லாம், அப்பகுதி மக்களோ, விழாவிற்கு சென்றவர்களோ பொருட்படுத்தாமல், ராமர் கும்பாபி‍ஷேக விழாவை, பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தினர். அயோத்தி நகரையொட்டி சரயு ஆற்றங்கரையில், செயற்கையாக கால்வாய் அமைக்கப்பட்டு, அதன் இரு பக்கமும் படி அமைத்து, படியின் இருபுறமும், இரவில் ஆரத்தி எடுக்கப்பட்டது. அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அயோத்தியில், 'வீணா பாய்ன்ட்' என அழைக்கப்படும், வீணை சிலை மற்றும் ஹனுமன் சிலையுடன் கூடிய இடம், 'லோக்கல் ஜங்சன் பாய்ன்ட்' என அழைக்கப்படுகிறது. அங்கு ராமருக்கு, 20 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவை, 'செல்பி பாய்ன்ட்' என அழைக்கப்படுகிறது. அங்கு அனைவரும் நின்று, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், நாங்கள், ராமர் பாதம் வைத்து பூஜை செய்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, நாங்கள் ராமர் பாதம் கண்டு வழிபட்டோம். விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்.,- வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரே செய்திருந்தனர். அரசியல்வாதிகள் யாரையும் செய்ய அனுமதிக்கவில்லை. விழாவிற்கு வரும் அனைவருக்கும், அங்கவஸ்திரம் சாத்தி, சந்தனம், குங்குமம் வைத்து அனைவரையும் கனிவுடன் வரவேற்றனர். போலீசாரோ, அரசு அதிகாரிகளோ ஒருவர் கூட இங்கு இல்லை. தன்னார்வ தொண்டர்களே அனைவரையும் வரவேற்று, விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்த வசதிகளையும் செய்து கொடுத்தனர். பின்னர், விழா நடந்த ராமர் கோவிலிற்கு, காலையில், 9:00 மணியளவில் சென்றடைந்தோம். அங்கேயே ஒரே இடத்தில், மாலை, 6:30 மணி வரை அமர்ந்திருந்தோம். அனைவருக்கும் தேவையான குடிநீர், உணவு, காபி போன்றவை உட்கார்ந்திருந்த இடத்திற்கே தேடி கொண்டு வந்து கேட்டு கேட்டு வழங்கினர். அங்கு ஆன்மிகவாதிகள், மடாதிபதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில், விழாவிற்கு, அனைத்து மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்கள். அனைவரும், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த மொழியை பேசுபவர்கள் என்ற பாகுபாடின்றி, ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்தப்பட்டனர். மேலும், அங்கு பங்கேற்ற அனைவருக்கும் இந்தியர்கள் என்ற எண்ணம் மட்டுமே, மேலோங்கி காணப்பட்டது.விழாவின் முக்கிய அம்சமாக, விழா தொடங்கும்போது, முதன் முதலாக, காலை, 11:00 மணியளவில், தமிழகத்தில் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, இதேபோன்று, பல்வேறு மாநில இசை கருவிகளின் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆரத்தி எடுக்கும் நிகழ்வின்போது, முதல் பாடலாக, தமிழ் பாடலான, 'குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா...' என்ற, தமிழ்பாடல் பாடப்பட்டது. இவை பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். அதே வேளையில் ஆரத்தி நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போதே, கோவிலின் மேல் இரண்டு கருடன் வட்டமிட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவை எல்லாம் செயற்கையாக உருவாக்க முடியாது. இந்த நிகழ்வை பார்த்தவர்கள் அனைவரும், ராமரே நேரில் வந்து காட்சி அளித்தது போல், அனைவரும் பரவசமடைந்து, எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது ஹேலிகாப்டரிலிருந்து கோவிலின் மீது மலர்கள் கொட்டப்பட்டதால், கருடன் அங்கிருந்து விலகி சென்றது. விழா முடிந்து, பிரதமர் அங்கிருந்து புறப்பட்டாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத், மாலை, 6:00 மணிக்கு மேலும், அங்கேயே இருந்து அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் பணியில், தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி கொண்டே, கண்காணித்து கொண்டு, அங்கு சுற்றி சுற்றி வந்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், ராமரை எளிமையாக கண்டு வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமலும், தள்ளு முள்ளு இல்லாமல், அனைவரும், 5 நிமிடம் நின்று தரிசனம் செய்யும் அளவிற்கு அனுமதிக்கப்பட்டனர். சிறு குறை கூட கூற முடியாத அளவிற்கு, விழா ஏற்பாடுகள் திட்டமிட்டு, 'இன்டர் நேஷனல்' கூட்டம் நடத்தப்பட்டால், எந்த அளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்டு பணிகள் செய்யப்படுமோ அந்த அளவிற்கு, தன்னார்வலர்களை கொண்டு விழா பணிகள் செய்யப்பட்டது. மாலையில், சாலைகளில் வாகனங்கள் செல்லும் வழியின் இரு புறங்களிலும் மற்றும் சென்டர் மீடியனிலும் சாலை முழுவதும் தீபம் ஏற்றப்பட்டு கண்கொள்ளா காட்சியளித்தது. முதலில் நான் அவை, வண்ண மின்விளக்குகள் என நினைத்தேன். பின்னர்தான், அவை தீபம் என தெரிந்தது. வெட்டவெளியில் சாலையில் எவ்வளவு காற்றடித்தாலும், தீபம் அணையாமல் எரிந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. வாகன ஓட்டிகளை, தீபத்திற்கு இடையூறு செய்யாமல் பக்தர்கள் வாகனத்தை எடுத்து செல்லுமாறு, பணிவாக கேட்டு கொண்டனர். வாகன ஓட்டிகளும் அவ்வாறே மெதுவாக ஊர்ந்து சென்றனர். ராமர் பட்டாபிஷேக விழா, மன்னர்கள் காலத்தில் எப்படி நடத்தப்பட்டது என்பதை நுால்களில்தான் படித்துள்ளேன். அந்த நிகழ்வை நேரடியாக கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியது. இவற்றை நேரில் பார்த்து, ராமரை வழிபட்டது பாக்கியமாக கருதுகிறேன். மொத்தத்தில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா என்பது, வரலாற்று ராமர் பட்டாபிஷேக விழாவை நேரில் பார்த்தது போலவும், இந்தியர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாகவும் இருந்தது. இது அனைவரும் பெருமைப்பட வேண்டியதாகும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை