| ADDED : டிச 01, 2025 05:21 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில், கடந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்காத பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட க்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களை, கடந்த 22ம் தேதி முதல், எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டதால், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. நகர பகுதிகளில் 260 கடைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பணியாற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், எஸ்.ஐ.ஆர்.பணியில் உள்ள பி.எல்.ஏ.,க்களுக்கு உதவியாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பல கடைகள் பூட்டியுள்ளதால், பொது மக்கள் கடைக்கு வந்து ஏமாற்த்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நவம்பர் மாதத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கிட, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.