| ADDED : நவ 28, 2025 06:32 AM
விழுப்புரம்: 'நான்கு அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார்' என, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகம் கூறினார். விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., ஒன்றிய செயலாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை இதுவரை மருத்துவ பரிசோதனைக்குக்கூட அனுப்பவில்லை. அதை யார் தடுத்தது, என்ன காரணம். கற்பழிப்பு குற்றவாளிக்கு துணை போகிற அளவுக்கு ஸ்டாலின் அரசு தரம் தாழ்ந்து போய்விட்டதா. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இந்த அரசு ஜனநாயக அரசு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக செயல்படவில்லை. அதிகாரிகளால் நடத்தப்படும் அரசாங்கம். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. நான்கு அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். தற்போது இந்த விவகாரத்தில் தி.மு.க., தலையிட்டு இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தி.மு.க., சார்பிலும், காவல் துறையும் அறிக்கை கொடுத்துள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் எங்கும் நடக்காத வகையில் பெண்ணை கற்பழித்த குற்றவாளிக்கு ஆளும் அரசே துணை போவது வெட்ககேடான செயல்.இது இந்த ஆட்சியின் ஆணவம், அகங்காரத்தை காட்டுகிறது. குற்றவாளியை கைது செய்வதை விட்டுவிட்டு அவருக்கு ஆதரவாக காவல்துறை, ஆளுங்கட்சியினர் அறிக்கை விடுகின்றனர். ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,வினரை காவல்துறையினர் கைது செய்கின்றனர். இதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. இனிமேலாவது உண்மை நிலைமையை புரிந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.