| ADDED : ஜூன் 27, 2024 03:28 AM
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 2013ம் ஆண்டு, பல்கலைகழகத்தை அரசு ஏற்றது. இதில், 2010ம் ஆண்டு முதல் 2012 வரை, தொகுப்பூதிய ஊழியர்களாக 171 பேர் நேரடியாகவும், 34 பேர் கருணை அடிப்படையிலும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 12 ஆண்டுகளாக ரூ. 5 ஆயிரம் முதல், ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி பல போராட்டங்களை நடத்தினர்.ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் செய்ய சாத்தியமில்லை என, அரசு கைவிரித்தது. 2 ஆண்டுக்கு முன்பே, நிதித்துறை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தொகுப்பூதிய ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவு அளிக்கப்பட்டது. 5 முறை தொகுப்பூதிய ஊழியர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 30ம் தேதியோடு, பணியில் இருந்து நீக்க, அரசின் நிதித்துறை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இத்தகவல் அறிந்த தொகுப்பூதிய ஊழியர்கள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இப்பிரச்னை தொர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.