சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான, ஆர்.டி.இ., கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு விடுவித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கியோரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணம், மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்போடு வழங்கப்படுகின்றன. கடந்த 2013ல் இருந்து 2023 வரை, எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ - மாணவியருக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், 2023 - 24 மற்றும் 2024 - 25ம் கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணத்தை, தற்போது தமிழக பள்ளிக்கல்வி துறை விடுவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில், 7,594 பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக, 424 கோடியே 98 லட்சத்து 89,724 ரூபாய்; 2024 - 25ம் ஆண்டில், 7,609 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 45,961 மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக, 45 கோடியே 85 லட்சத்து 9,831 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.