உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எதிர்க்கட்சியில் ஆதங்கம்; ஆளுங்கட்சியில் அலட்சியம்: முதல்வர் ஸ்டாலின் குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்

 எதிர்க்கட்சியில் ஆதங்கம்; ஆளுங்கட்சியில் அலட்சியம்: முதல்வர் ஸ்டாலின் குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்

மதுரை: 'எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதங்கப்பட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வரான பின் அலட்சியம் காட்டுகிறார்' என பகுதிநேர ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழகத்தில் அரசு நடு, உயர், மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்க்கைக் கல்வி பாடங்களுக்காக 2012ல் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. பின் 2014, 2017, 2021 ஆண்டுகளில் படிப்படியாக சம்பளம் உயர்த்தி தற்போது ரூ. 12,500 என வழங்கப்படுகிறது. சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு பின் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போராட்டங்களில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உத்தரவின்பேரில் அவரது கட்சியின் முக்கிய தலைவர்கள் பொன்முடி, ஆ.ராஜா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் எங்களுக்காக ஆதங்கப்பட்டு பேசினர். பின் 2021 சட்டசபை தேர்தலில் 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என 181வது வாக்குறுதியாக ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலின் முதல்வரான பின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' முகாமில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை நிகழ்ச்சிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடி 100 நாட்களில் நிரந்தரம் செய்வதாக நேரிலும் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இதுவரை நடக்கவில்லை என குமுறுகின்றனர். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: ஆட்சிக்கு வரும்முன் எங்கள் நிலை குறித்து ஆதங்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த பின் பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு துறைகளில் பணிபுரியும் அனைவரையும் நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அவரது வாக்குறுதி கனவாகவே உள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வில் ரூ.12,500 சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. மருத்துவ காப்பீடு, பி.எப்., வசதியும் இல்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஆதங்கப்பட்ட ஸ்டாலின், அதே மனநிலையுடன், 2026 சட்டசபை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை