உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களை கலைக்க கடும் எதிர்ப்பு

 தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களை கலைக்க கடும் எதிர்ப்பு

சென்னை: தோட்டக்கலைத் துறையில், 1,550 தோட்டக்கலை விரிவாக்க அலுவலர் பணியிடங்களை நீக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வேளாண்துறையில் 2,079; தோட்டக்கலைத் துறையில் 1,550; வேளாண் வணிகத் துறையில் 385 விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இவர்கள் மாநிலம் முழுதும் உள்ள, 12,525 ஊராட்சிகளுக்கு சென்று, விவசாயிகளை சந்தித்து, வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி தொடர்பான, மானிய உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர், 8 முதல் 10 ஊராட்சிகளுக்கும், ஒரு தோட்டக்கலை அலுவலர் 10 முதல் 15 ஊராட்சிகளுக்கும், நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒத்திவைப்பு இந்நிலையில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக துறைகளின் சேவைகளை ஒரு சேர வழங்க, நான்கு கிராமங்களுக்கு, ஒரு விரிவாக்க அலுவலர் நியமிக்க, 2023ல் அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை வேளாண்துறை செயலரால் பிறப்பிக்கப் பட்டது. வேளாண்மை படித்தவர்களால், தோட்டக்கலை தொழில் நுட்பங்களையும், தோட்டக்கலை படித்தவர்களால், வேளாண்மை தொழில் நுட்பங்களையும், விவசாயிகளுக்கு வழங்கு வதில் சிக்கல் ஏற்படும் என புகார் எழுந்தது. வேளாண்மை, தோட்டக்கலை ஊழியர்கள் சங்கங்களும், இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல், அடுத்த ஐந்து மாதங்களில் நடக்க உள்ளது. இந்நிலையில், நான்கு கிராமங்களுக்கு ஒரு விரிவாக்க அலுவலரை நியமிக்கும் பணிகளை, வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி துவக்கி உள்ளார். மேலும், வேளாண்துறை கீழ் இயங்கும், மண் ஆய்வுக் கூடங்கள், பூச்சி மருந்து ஆய்வுக் கூடங்கள், நகர தென்னை திட்ட அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும், 87 உதவி வேளாண் அலுவலர்கள், உழவர் சந்தைகளை நிர்வகிக்கும், 242 உதவி வேளாண் அலுவலர்கள் பணியிடங்களை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். போராட்டம் இது குறித்து, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகன், பொதுச்செயலர் சுரேஷ் ஆகியோர் கூறியதாவது: தோட்டக்கலை அலுவலர்கள், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் பட்டம், டிப்ளமா முடித்து, துறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வேளாண்மை சாகுபடி தொடர்பான எந்த விபரமும் தெரியாது. இந்த அடிப்படை கூட தெரியாமல், இணைப்பு முயற்சி துவக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுதும், இன்று போராட்டம் நடக்க உள்ளது. திட்டத்தை ரத்து செய்யும் வரை, பல வகைகளில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை