| ADDED : மார் 20, 2024 12:10 AM
சிவகங்கை:சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்., சிட்டிங் எம்.பி.,யான கார்த்திக்கு எதிராக போட்டியிட அக்கட்சி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ., தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.இத்தொகுதியை தி.மு.க.,--காங்., கூட்டணியில் இம்முறை தி.மு.க.,விற்கு ஒதுக்க அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தேவகோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்டோர் காங்., தலைவர் ராகுலை விமர்சனம் செய்த கார்த்திக்கு மீண்டும் சிவகங்கையில் சீட் தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இவர்கள் கார்த்தி, அவரது தந்தை முன்னாள் அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் காங்., வேட்பாளராக கார்த்தி அறிவிக்கப்படாமல் இருக்க, தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையில் இத்தொகுதியில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, வேலுச்சாமி ஆகியோர் தனித்தனியாக தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு அளித்தனர். இதையடுத்து கட்சிக்குள் கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதை தி.மு.க.,வினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.