முப்பரிமாண முறையில் வீட்டை அலங்கரிக்க உதவும் வடிவமைப்புகள் !
புதிதாக கட்டிய வீட்டை பார்ப்பவர்கள் பிரமிக்கும் அளவுக்கு அலங்கரிக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவர் என்பதில் மாற்று கருத்து இருக்காது. ஆனால், இதற்கான சரியான வழிமுறை எது என்பதை கண்டுபிடித்து, பயன்படுத்துவதில் தான் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.குறிப்பாக, புதிய வீட்டுக்கு தொழில்முறை உள் அலங்கார வல்லுனரை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான செலவுகள் பட்ஜெட்டுக்கு ஒத்துவராது. அதே சமயம் வீட்டை அலங்கரிக்க சரியான நபரகளை பயன்படுத்த என்ன செய்வது என்பதில் தான் பலருக்கும் சிக்கல் வருகிறது.கட்டுமான பணிகள், பூச்சு வேலை முடிந்த பின் தான் பெரும்பாலான மக்கள் வீட்டின் உட்புற அலங்காரம் தொடர்பான விஷயங்களை யோசிக்கின்றனர். இதற்கு பதில், வீட்டுக்கான வடிவமைப்பை உருவாக்கும் போதே உள் அலங்காரம் தொடர்பான விஷயங்களிலும் உரிய கவனம் செலுத்துவது நல்லது.இதில் வீட்டின் உட்புற சுவர்களுக்கு எங்கு, என்ன வண்ணம் அடிப்பது என்பதில் துவங்கி பல்வேறு விஷயங்களில் புதிய வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவர்களில் வண்ணம் பூசுவதற்கு பதிலாக, வால் பேப்பர்கள் ஒட்டும் பழக்கம் சமீப காலமாக பரவலாக காணப்படுகிறது.இதில் இயற்கை காட்சிகள், கதாபாத்திரங்கள், பிரபலங்கள் ஆகிய படங்கள் மட்டுமே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது முப்பரிமாண முறையில் தயாரிக்கப்படும் வால் பேப்பர்கள் பிரபலமாகி உள்ளதால் மக்கள் அதை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.இத்துடன் சுவர்களில் வண்ணம் அடிப்பது தொடர்பான பணிகளிலும் முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, சுவர்கள், தரைகளில் வண்ணம் அடிக்கும் முறையில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் வடிவமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.நீர் நிலையில் நடப்பது, மலை சிகரத்தின் மேல் இருப்பது, இரவு நேர வானத்தில் நடப்பது போன்ற தோற்றங்களை முப்பரிமாண முறையில் தரையில் ஏற்படுத்த முடியும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதற்கான சேவைகளை மக்களுக்கு ஏற்ற விலையில் வழங்க முன்வந்துள்ளன.பொதுவாக வீட்டின் வரவேற்பு அறையில், மாடிப்படியில் இது போன்ற வடிவமைப்புகளை ஏற்படுத்தும் போது, வீட்டின் உட்புற அழகு பார்ப்போரின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும். உங்கள் வீட்டில் முப்பரிமாண முறையில் தரையில் வடிவமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதிலும் சரியான வழிமுறைகள் எது என ஆலோசனைகளை பெற்று செயல்படுங்கள்.தற்போதைய நிலவரப்படி, வீட்டின் அறைகளில் தரையில் முப்பரிமாண ஸ்டிக்கர் ஒட்டுவது, கோட்டிங் பூச்சு போன்ற வழிமுறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் உங்கள் வீட்டுக்கு சரியான வழிமுறை எது என்பதில் தெளிவான வழிகாட்டுதல்களுடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் உள் அலங்கார வல்லுனர்கள்.