உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பயன்படுத்தி வீடு கட்டலாமா?

ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பயன்படுத்தி வீடு கட்டலாமா?

''இட நெருக்கடி உள்ள இடம், வேலையாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது, கட்டுமான மூலப்பொருட்கள் வெகு துாரத்தில் இருந்து வர வேண்டியிருப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமான முறை ஒரு வரப்பிரசாதம்,'' என்கிறார், கோவை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் லட்சுமணன்.இது குறித்து, அவர் கூறியதாவது: ப்ரீகாஸ்ட் கான்கிரீட் என்பது, கான்கிரீட் கலவையை ஓர் அச்சில் ஊற்றி, குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பிரித்து எடுக்கப்படுவது. இது, தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, கட்டுமான தளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கே கொடுக்கப்பட்ட வரைபடத்தின் படி இணைத்து உருவாக்கும் கட்டுமானம்.நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பம், இப்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி, வீடு கட்டுவது சுலபமாக இருக்கிறது. வீட்டுக்கான தரை, ஜன்னல்கள், சமையலறை எல்லாமும் தொழில் கூடத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.அறைகள் மட்டுமல்ல, எலக்ட்ரிக்கல் ஒயரிங் ஸ்விட்ச், பிளம்பிங் வேலைகளையும் தொழில் கூடத்திலேயே முடித்து விடுகின்றனர். இம்முறையில், பாரம்பரிய முறையில் உபயோகப்படுத்தப்படும் சுவர்களுக்கு பதிலாக, கன சதுரங்களையும் யூனிட்களாக பிரித்து பயன்படுத்துகின்றனர். இம்முறையில் உருவாக்கப்படும் துாண்கள், கான்கிரீட் கம்பி சட்டங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால், இது பாரம்பரிய முறையை விடவும் உறுதியானதாகவும், உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.இந்த துாண்கள், அதிக எடையை தாங்கக் கூடியது; பூகம்பம் அதிர்வுகளை தாங்கக்கூடிய வகையிலும் இந்த அமைப்பு இருக்கும். 95 சதவீத வேலைகள், தொழிற்கூடத்திலேயே முடிந்து விடும் என்பதால், பாரம்பரிய முறையை காட்டிலும், பொருட்செலவு மிகவும் குறைவு. கட்டுமான வரைபடம் மற்றும் கட்டுமான விபரங்களை தெரிவித்து விட்டால் போதும். கட்டட இடத்துக்கு சென்று, முன்களப்பணி பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்து, அதற்கேற்றார் போல் வடிவமைத்து, தொழிற்சாலையில் தரமான முன்னேற்பாடுகளுடன் தயாரித்து, கிரேன் வாயிலாக களத்துக்கு கொண்டு சென்று, இன்டெர் லாக் வாயிலாகவும் இணைத்து உருவாக்குகின்றனர். சாதாரண வீடு போல அனைத்து அம்சங்களுடன் கட்டமைப்பது, இம்முறையின் சிறப்பம்சமாகும்.இவ்வாறு கட்டப்பட்ட வீட்டை, தேவையில்லை என்றால், வேறு இடத்துக்கு எடுத்து சென்று மாற்றி கட்டமைக்க முடியும் என்பது, இதனுடைய மற்றொரு சிறப்பம்சம். இட நெருக்கடி உள்ள இடம், வேலையாட்கள் தட்டுப்பாடு, கட்டுமான மூலப்பொருட்களை வெகு துாரத்தில் இருந்து வர வேண்டியிருப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமான முறை ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ