என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில், 'கிக்' போதுமான அளவிற்கு இல்லாததால் தான், நம், 'குடி'மகன்கள், 'கிக்' அதிகம் உள்ள கள்ளச்சாராயத்தை தேடிப் போகின்றனர்' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியது, இன்று பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதிய அளவுக்கு தரமில்லாததாக இருக்கிறது என்பதை, அமைச்சர் துரைமுருகன் வெட்ட வெளிச்சம் ஆக்கி விட்டார். எனவே, கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் அமோகமாக நடப்பதற்கு, திராவிட மாடல் அரசும்காரணம் என்பதையும் துரைமுருகன் துணிந்து சொல்லி விட்டார்.'பெரியவர்கள் சொன்னால் அது பெருமாள்சொன்னது போல' என்ற பழமொழி தான், அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சில் இருந்து தெளிவாகிறது. எனவே, உண்மையை உரக்க சொன்ன துரைமுருகனுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது நியாயமே இல்லை.கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு கடும் தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வந்துள்ள திராவிட மாடல் அரசு, தரக்குறைவான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தானே நியாயம்? நம் பக்கத்து மாநிலமான ஆந்திராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு, தேர்தல் வாக்குறுதியாக, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குறைந்த விலையில் தரமான மதுபானங்களை விற்பனை செய்வோம்' என, தெரிவித்திருந்தார்.தமிழக அரசும், நாயுடுவின் வழியை பின்பற்றி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு, 'குடி'மகன்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தாலே, கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். பிரார்த்தனை செய்யுங்கள் சுனிதா!
எம்.மகேஷ்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடவுள் அனைவருக்கும்
ஞானத்தை கொடுக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாகஇருந்தது. ஆனால், இனி,
சர்வாதிகாரம் செய்பவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக
இருக்கும்' என்று, குமுறி கொந்தளித்து இருக்கிறார் மதுபான கொள்கை ஊழல்
புகழ் ஆம் ஆத்மி கட்சியின், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி
சுனிதா கெஜ்ரிவால்.சர்வாதிகாரம் செய்பவர்கள் ஒழிக்கப்பட வேண்டியது
இருக்கட்டும்.முதலில் உங்கள் கணவர் கெஜ்ரிவாலின் பணப்பாசத்தை ஒழித்து
விட்டு, நாட்டுப்பற்றை ஏற்படுத்த பிரார்த்தனை செய்யுங்கள் சுனிதா.ஊழலை ஒழிப்பேன் என்று எவர் கச்சை கட்டி வில்லேந்தி புறப்பட்டாரோ அந்த புண்ணியவானே, இன்றைய தேதியில் ஊழலின் மொத்த உறைவிடமாக உள்ளார்.ஊழலின் உறைவிடமாக மட்டுமல்ல; தேசத் துரோகிகளை விடுதலை செய்கிறேன் என்று கூட, பேரம் பேசி கையூட்டு பெற்றிருக்கிறார்.மகாகவி காளிதாஸ் என்று ஒரு படம்.காளியின்
அருள் பெறுவதற்கு முன் அந்த காளிதாஸ், அடி முட்டாளாக இருப்பார். நுனிக்
கிளையில் அமர்ந்து, அடிக்கிளையை வெட்டும் அளவுக்கு அறிவாற்றல் பெற்றவர்.தனக்கு
அறிவும், ஆற்றலும் வர வேண்டுமென்பதற்காக, காளி கோவிலின் பலிபீடத்தில்
தலையை முட்டி மோதி, 'எனக்கு அறிவைக் கொடு! புத்தியைக் கொடு' என்று வேண்டிக்
கொள்வார்.காளிதேவி, காளிதாசனின் முன் தோன்றி, அவன் நாவில் தன்
கையிலிருக்கும்சூலத்தால், எழுதி அருள் வழங்குவார். அதன்பின்னரே அந்த
அடிமுட்டாள் காளிதாசன், அகிலம்போற்றும் மகாகவி காளி தாசனாக மாறுவார்.உங்கள்
கணவர் கெஜ்ரிவால், கம்பிக் கதவுகளுக்கிடையே பலத்த பாதுகாப்பில்
இருப்பதால், அவரால் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய இயலாது.அவருக்கு
பதிலாக, தாங்கள் எந்த கடவுளிடம்அனைவருக்கும் ஞானத்தை கொடுக்குமாறு
வேண்டினீர்களோ அந்த கடவுளிடம், 'என் கணவருக்கு பணப்பற்றை அகற்றி,
நாட்டுப்பற்றை கொடு! நாட்டுப்பற்றை கொடு!' என்று பிரார்த்தனை செய்ய
துவங்குங்கள்.உங்கள் பிரார்த்தனையை ஏற்று, கடவுள் அருள்
புரிகிறாரா, ஊழல் புகழ் அரவிந்த் கெஜ்ரிவால் மனம் வருந்தி திருந்துகிறாரா
என்று பார்க்கலாம். மீண்டும் வேண்டும் முதியோர் கட்டண சலுகை!
-வி.சி.கிருஷ்ணரத்னம்,
காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில்
கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது. ரயில்வே
விதிகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கையர், 58
வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவர்.மத்திய
பிரதேசத்தைச்சேர்ந்த சந்திரசேகர் கவுர்என்பவர், தகவல் அறியும்உரிமை
சட்டத்தின் கீழ்கேட்கப்பட்ட கேள்விக்குபதில் அளித்துள்ள இந்தியன்ரயில்வே,
'மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம், இந்தியன்
ரயில்வே 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது' என
தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்
கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை
ரயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய்கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரயில்
கட்டணத்தில் பெண்களுக்கு 50சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கையருக்கு
40 சதவீத சலுகையும் ரயில்வே வழங்கியது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த
சலுகை திரும்பப் பெறப்பட்டதில் இருந்து, மூத்த குடிமக்கள் ரயில்
பயணங்களுக்கு மற்ற பயணியருக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி
டிக்கெட் வாங்கி வருகின்றனர். கொரோனா பொது முடக்கத்திற்கு முன்,
ரயில் கட்டணத்தில் பெண்களுக்கு50 சதவீத சலுகையும், ஆண் மற்றும்
திருநங்கையருக்கு 40 சதவீத சலுகையும் ரயில்வே வழங்கியது.கடந்த
நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், 9
கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கையர் மொத்தமாக 13,287 கோடி ரூபாய்
செலுத்தி ரயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.மூத்த குடிமக்களில்
சொற்பமானவர்களே மத்திய,மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
பெரும்பாலானவர்கள், தங்கள் பிள்ளைகள் உட்படமற்றவர்கள் பராமரிப்பில், சொந்த
வருமானம் இன்றியே உள்ளனர். இவர்களால், ரயிலில் முழு கட்டணம் செலுத்தி
பயணிப்பது என்பது பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே,
மூத்த குடிமக்களின் நலனுக்காக, மீண்டும் ரயில் கட்டண சலுகையை அமல்படுத்த
வேண்டும். மூன்றாவது முறையாக பதவியேற்று உள்ள மோடி தலைமையிலான அரசு இது
குறித்து பரிசீலிக்க வேண்டும்.