உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா அறிவிப்பு

மாண்டியா: 'ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்பேன்' என்று, சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா அறிவித்து உள்ளது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு காலியாகும், நான்கு எம்.பி., பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேர், பா.ஜ., கூட்டணி சார்பில் இருவர் களமிறக்கப்பட்டு உள்ளனர். அதாவது நான்கு பதவிக்கு, ஐந்து பேர் போட்டியில் உள்ளனர்.

45 ஓட்டு

ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய 45 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுகள் தேவை. அப்படி பார்த்தால் காங்கிரஸ் மூன்று எம்.பி.,க்கள், பா.ஜ., ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜ., கூட்டணி ஐந்தாவது வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மூலம், ஐந்தாவது வேட்பாளருக்கு 40 ஓட்டுகள் கிடைக்கும். அவரது வெற்றிக்கு மேலும் ஐந்து ஓட்டுகள் தேவைப்படுகிறது.இதனால், மூன்று சுயேச்சை மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுகளை பெற, பா.ஜ., கூட்டணி முயற்சி செய்து வருகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு யாருக்கு என்பது, மதில் மேல் பூனையாக உள்ளது.

குழப்பமில்லை

இந்நிலையில் மாண்டியா மேலுகோட் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா நேற்று அளித்த பேட்டி:ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்பேன். இதில் எந்த குழப்பமும் இல்லை. எனது தந்தை புட்டண்ணய்யா காலத்தில் இருந்தே, காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. பா.ஜ., கூட்டணி தலைவர்களும், என்னை தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும் என்று மிரட்டல் விடுக்கவில்லை.எனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை, விமர்சிப்பது சரியல்ல. விவசாயிகள் கார், டிராக்டர்கள் வாங்க கூடாதா. அதை வைத்து விமர்சிக்கின்றனர். மாண்டியாவில் பேபி மலையில் பாறைகளை அகற்றுவதற்கு, வெடி வைப்பது தொடர்பாக, விவசாய சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதன்மூலம் தர்ஷன் புட்டண்ணய்யா ஆதரவு, காங்கிரஸுக்கு என்பது உறுதியாகி உள்ளது.

யாருக்கு ஓட்டு?

இதற்கிடையில், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:ராஜ்யசபா தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை, தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சி முகவர்களிடம், எம்.எல்.ஏ.,க்கள் காட்ட வேண்டும். இதனால் அவர்கள் எந்த வேட்பாளருக்கு, ஆதரவாக ஓட்டு போடுகிறார் என்பது தெரிந்து விடும். கட்சி மாறி ஓட்டு போட, எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இல்லை. யாரும் சாகசத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.லோக்சபா தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் அரசு கவிழும் என்று, மத்திய அமைச்சர் ஷோபா கூறுகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். எங்களுக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அரசு பாதுகாப்பாக உள்ளது. 'ஆப்பரேஷன் தாமரை' செய்ய முடியாது.காங்கிரசை விமர்சித்து பேச, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரவிக்கு தகுதி இல்லை. எங்கள் வாக்குறுதிகளை 420 திட்டம் என்று அவர் கூறி உள்ளார். வகுப்புவாத, குற்ற அரசியல் செய்ததால் தான், ரவியை மக்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை