செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், நல்லாமூர், ஜமீன்எண்டத்துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல கல் குவாரிகள் செயல்படுகின்றன.கல் குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக, ஜல்லி, எம் - -சாண்ட், பி - சாண்ட், கருங்கற்கள் ஆகியவை கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகப்படியான பாரங்கள் ஏற்றிச்செல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.மேலும், லாரிகளில் பாரம் ஏற்றிச் செல்லும்போது, தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் செல்வதால், லாரிகளை பின் தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள்சிரமப்படுகின்றனர்.இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான டிப்பர் லாரிகள், நம்பர் பிளேட் இல்லாமல் வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதிக அளவில் பாரம் ஏற்றுதல், அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் போது, புகார்களில் இருந்து தப்பிக்க, நம்பர் பிளேட் இல்லாமல் லாரிகளை இயக்குவதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நம்பர் பிளேட் இல்லாமல் உலா வரும் லாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.