மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், அரசின் கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில், நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மறுக்கப்படுவதால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதியினர் ஆலோசித்து வருகின்றனர்.மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அண்ணா நகர், ஒன்பதாவது மற்றும் 14வது வார்டுகளாக உள்ளன. இப்பகுதி, கிராம நத்தம் புறம்போக்கு இடமாக, புல எண் 160/2 உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், காலியிடமாக இருந்து, நாளடைவில் குடிசைகள் பெருகி வசிப்பிடமாக மாறியது.தற்போது, நவீன கான்கிரீட் வீடுகளாக மாற்றமடைந்து, 750க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பலவேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு சமூக மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.பேரூராட்சி நிர்வாகம், வீடுகளுக்கு சொத்து வரி வசூலிக்கிறது. குடிநீர், கான்கிரீட் சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை ஆகிய வசதிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், வீடுகளுக்கு மனை பட்டா மட்டும், தற்போது வரை வழங்கப்படவில்லை. அரசிடம் பட்டா கோரி, நீண்டகாலமாக வலியுறுத்தியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.ஐந்து ரதங்கள் சிற்பம் அருகில் உள்ள பகுதி என்பதால், தொல்லியல் துறை கட்டுப்பாடு காரணமாக, மனை பட்டா வழங்க இயலவில்லை என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட மற்ற சிற்பங்கள் அருகில், பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், இங்கு மட்டும் மறுக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2001ல், வீடுகள் எண்ணிக்கையை கணக்கிட்டு, பட்டா வழங்க வருவாய்த் துறை கோப்பு தயாரானது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தடைபட்டது.அதன்பின், தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு உள்ளிட்டோர், இதுகுறித்து மத்திய அரசிடம் பரிந்துரைத்து, நிச்சயம் பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர். தேர்தலுக்கு பின், கண்டுகொள்ளவில்லை.இப்பகுதிக்கு, நிபந்தனை மனை பட்டா வழங்க வலியுறுத்தும் குடியிருப்புவாசிகள், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.