உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார்2 மாதத்தில் !:நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி

பெருங்களத்தூர் --- வண்டலூர் பாலம் தயார்2 மாதத்தில் !:நெடுங்குன்றம் பாதையில் தொடரும் இழுபறி

பெருங்களத்துார்: சென்னை மாநகரின் நுழைவு வாயிலான பெருங்களத்துார் என்றாலே, போக்குவரத்து நெரிசல் தான் நினைவுக்கு வரும். அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால், நெரிசல் என்பது நிரந்தரமாக மாறியது. இதையடுத்து, பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கடந்த 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.இந்த திட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கம்; பெருங்களத்துார் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராசிங் மேம்பாலம்; பெருங்களத்துாரில் இருந்து வண்டலுார் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.கொரோனா தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த கட்டமாக, பெருங்களத்துாரில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை, கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்துள்ளது.

2 ஆண்டு காத்திருப்பு

அதேபோல ரவுண்டானா பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பெருங்களத்துார் - வண்டலுார் மார்க்கமான பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரண்டு மாதத்திற்குள் திறக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாதை திறந்தால், பெருங்களத்துாரில் நெரிசல் வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.ஆனால், பெருங்களத்துாரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலப் பணிகள், மிக தாமதமாக நடக்கின்றன. இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமானவை. வனத்துறையின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் நிலவுவதே, இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.அனுமதி கேட்டு வனத்துறைக்கு நெடுஞ்சாலைத் துறையினர் கடிதம் எழுதினர். இரண்டு ஆண்டுகளுக்கு கிடப்பில் இருந்த பின், சில நாட்களுக்கு முன் தான், மத்திய வனத்துறைக்கு அனுப்பிஉள்ளது.மத்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், அதற்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை செலுத்த, நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது. இந்த பாலத்தின் பணிகளுக்காக, இடையில் உள்ள துணை மின் நிலையத்தையும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. துணை மின் நிலையத்திற்காக, மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளது. அந்த இடத்திற்கான மதிப்பு, 12 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத் துறை செலுத்தியுள்ளது. அடுத்ததாக, துணை மின் நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான, 'ஷிப்டிங் சார்ஜ்' அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. இதற்கு, ஆறு மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது.இக்காரணங்களால், நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பாதை பணியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தை ஒப்படைக்கும் விஷயத்தில், மத்திய வனத்துறை அதிகாரிகளும், மாநில மின் வாரிய அதிகாரிகளும் அலட்சியம் காட்டாமல், விரைந்து செயல்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணிகள் தொய்விற்கு காரணம்

பீர்க்கன்காரணை - பெருங்களத்துார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது: மேம்பாலத்தில் இரண்டு பாதைகள் திறந்தும், நெடுங்குன்றம் வழியாக செல்வோருக்கு பயனில்லை. பெருங்களத்துார் பகுதிக்குள் செல்ல வேண்டிய வாகனங்கள், வழக்கம் போல் 2 கி.மீ., துாரம் சென்று திரும்பி வந்து, ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ரயில்வே கேட்டிலும் வழக்கம்போல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. திட்டத்தை வகுக்கும் போது, நெடுங்குன்றம் மார்க்கமான பாதைக்கு ஓ.எஸ்.ஆர்., நிலத்தை தருவதாக அருகேயுள்ள தனியார் நிறுவனம் கூறியது. அதன்பின், சட்ட சிக்கல் காரணமாக கைவிடப்பட்டது. தற்போது, வனத்துறை மற்றும் மின் வாரிய இடங்களை கேட்கின்றனர். இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் போது, இதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் இருந்துள்ளனர். முறையாக ஆய்வு செய்து, திட்டத்தை வகுத்திருந்தால், மேம்பால பணிகள் முடிந்து, எப்போதோ பயன்பாடிற்கு வந்திருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை