| ADDED : மார் 20, 2024 12:19 AM
சென்னை, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னையில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி மற்றும் வாக்காளர் பட்டியல் அளிக்க உள்ளனர்.சென்னையில், 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள்; 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். இவர்கள் மார்ச் 25ம் தேதிக்குள் படிவம் 12டியை பூர்த்தி செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட அலுவலரிடமோ ஒப்படைக்க வேண்டும்.ஏதேனும் சந்தேகம் இருந்தால், 1950; 1800 425 7012 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.