| ADDED : நவ 28, 2025 05:17 AM
கோவை: காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாக, பாடுபட்ட மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மத்திய சிறைக்கு சொந்தமான இடமாக இருந்ததால், நிலத்தை வகை மாற்றம் செய்வதற்கு காகித வடிவில் அரசு துறைகளுக்கு இடையே, அனுமதி பெறுவதற்கு மெனக்கெட வேண்டியிருந்தது. திறப்பு விழா தேதி இறுதி செய்யப்பட்டதும், கடந்த 12 நாட்கள் இரவு - பகலாக மாநகராட்சி குழுவினர் பணிபுரிந்தனர். இத்தகவலை,முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு கொண்டு சென்றார். உடனடியாக முதல்வர் ஸ்டாலின், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை வரவழைத்து பேசியுள்ளார். அப்போது, செம்மொழி பூங்கா உருவான விதம் குறித்து, முதல்வரிடம் கமிஷனர் விளக்கினார். அவரது இரு கரங்களையும் பிடித்து குலுக்கி, தனது தந்தையின் கனவை நனவாக்குவதற்கு, அக்கறை எடுத்து பணியாற்றியிருப்பதாக, நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த முதல்வர், பொன்னாடை அணிவித்து, மரியாதை செய்தார்.