| ADDED : செப் 19, 2011 10:36 PM
நத்தம் : நத்தத்தில் நெடுஞ்சலைத்துறைக்குட்பட்ட ரோட்டோரங்களில் கடைகள், வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நத்தத்தில், முக்கிய மாநில நெடுஞ்சாலை பகுதியான நத்தம்-மதுரை ரோடு செல்லும் பஸ் ஸ்டாண்ட்பகுதி, தர்பார் நகர், ந.கோவில்பட்டி, திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் மெயின்ரோட் டின் இரு புறங்கள், நத்தம்-செந்துறை செல்லும் மெயின்ரோட்டோரம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட இடங்களில் பல ஆண்டுகளாக பலர் மளிகை கடைகள், ஓட்டல்கள், காய்கறிகடைகள், பழக் கடைகள், டீக்கடைகள் வைத்து நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் ஆட்டோக்கள், மினி லாரிகள், கார்கள் ஆகியவற்றை நிறுத்தி ரோட்டில் தற்காலிக ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புக்களால் ரோட்டில் செல்லும் கார், லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவையும், நடந்து செல்லும் மக்களும் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சில நேரங்களில் ஆக்கிரமிப்பு இடையூறு காரணமாக சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று எதிராக வரும் போது விலக முடியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் சிறு சிறு விபத்துக்களால் போக்கு வரத்து தடை ஏற்படுகிறது. எனவே நத்தம் நெடுஞ்சாலை ரோட்டோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பாரபட்சமின்றி அகற்றி போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.