| ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை ஏற்படின், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பிரகாஷ் தலைமை வகித்தார். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் பேசியதாவது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக, முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை, மாநகராட்சி பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். கோடை வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும். அரசு அலுவலகங்களிலும் குடிநீர் வைக்க வேண்டும். பொதுமக்கள் அமர இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஓ.ஆர்.எஸ் கரைசல் வைக்க வேண்டும். வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் ஏற்படும் தீ போன்றவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை குடிநீர் தொட்டிகள் மூலம் வழங்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) டாக்டர்.மணீஷ், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.