| ADDED : ஜன 09, 2024 11:26 AM
ஈரோடு: தைப்பூசத்தை முன்னிட்டு, ஈரோட்டில் ஜோல்னா பை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில், தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். நடப்பாண்டு விழா வரும், 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் முருகன் கோவில்களுக்கு இருமுடி கட்டியும், விரதம் இருந்தும், பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் காவி, பச்சை நிற வேஷ்டி, துண்டுகள், இருமுடி, ஜோல்னா பை, துளசி மற்றும் சந்தன மணி மாலைகள் அதிகம் விற்பனையாகும். இதில் துணியாலான இருமுடி ஜோல்னா பையை, ஈரோட்டில் வைரபாளையம், நாராயணவலசு பகுதியில் தயாரிக்கின்றனர். பைகளில் சுவாமி படங்களுடன் ஸ்லோகங்கள் பிரிண்ட் செய்து, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.இதுகுறித்து இருமுடி ஜோல்னா பை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: பாத யாத்திரை சீசனுக்கு கோவில்களுக்கு செல்வோருக்கு, பெரிய பைகளை விட ஜோல்னா பை, இருமுடி பை அவசியம் தேவை. எடை குறைவு என்பதுடன் எளிதில் உலர்ந்து விடும்; துாக்கிச் செல்வதும் எளிது. தமிழகம் மட்டுமின்றி மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். நீலம், மஞ்சள், பச்சை நிறங்களில் ஜோல்னா பை, இருமுடிப்பை தயாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.