உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பால் வளத்துறை அமைச்சர் ஆவினுக்கு மட்டுமா? விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி

பால் வளத்துறை அமைச்சர் ஆவினுக்கு மட்டுமா? விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி

காங்கேயம்:தமிழகத்தில் லிட்டருக்கு ஐந்து ரூபாய் வரை, பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் குறைத்துள்ளதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாமல் கொள்முதலை நிறுத்தியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகம் முன் விரைவில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். தமிழக பால்வளத்துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அந்த சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:தமிழகத்தில் தினமும், 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது, இதில் ஆவின் நிறுவனம், 33 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது மொத்த உற்பத்தியில், 15 சதம் மட்டுமே. மீதி, 85 சதவீத உற்பத்தியை, 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செய்கின்றன. தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும் போது விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கும் கொடுப்பதில்லை. விலையை கூடுதலாக கொடுப்பதுமில்லை. தற்சமயம் பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற காரணத்தை கூறி, கொள்முதல் விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர். ஆனால் பால்வளத்துறை அமைச்சர், ஆவினுக்கு மட்டுமான அமைச்சராகவே செயல்பட்டு வருகிறார். பால் வளத்துறையும் அதே அடிப்படையில் செயல்படுகிறது. பால் கொள்முதல் விலையை குறைத்ததால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, தனியார் நிறுவனங்களை அழைத்து எச்சரித்து, குறைக்கப்பட்ட விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும். இல்லையேல் அந்த நிறுவனங்களை தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதை, 20 லட்சம் பால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களையும் தனியார் நிறுவனங்கள் அறிவிப்பின்றி மூடி வருகின்றனர். தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், பால் வளத்துறை உயரதிகாரிகள் இதில் தலையிட்டு, 20 லட்சம் பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தலைமை செயலகத்தின் முன் காத்திருப்பு போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை