| ADDED : மே 28, 2024 07:17 AM
ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கடம்பூர் மலையில், கடைசி மலை கிராமமாக மாக்கம்பாளையம் உள்ளது. இங்கு செல்ல குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் என இரு இடங்களை கடந்து, மக்கள் செல்ல வேண்டும். மழை காலங்களில் இரு இடங்களிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மாக்கம்பாளையம் கிராமம், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். கிராமத்துக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தும் தடைபடும். இந்நிலைக்கு முடிவு கட்ட, கிராம மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக, இரு பள்ளங்களின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி, 6.68 கோடி ரூபாய் செலவில், 2023ல் தொடங்கியது. பணி மந்தமாக நடப்பதால், சமீபத்தில் பெய்த மழையால், கிராம மக்கள் வழக்கம்போல் பாதிக்கப்பட்டனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்கவும் மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நமது நாளிதழிலும் தொடர்ந்து செய்தி வந்தது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணீஷ் கூறியதாவது: ஓடைகளில் தண்ணீர் வராத நாட்களில் மட்டுமே, பணி மேற்கொள்ள இயலும். குரும்பூர் பள்ளம் பகுதியில் பாலம் கட்டும் பணி இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். சக்கரை பள்ளம் பகுதியில் ஐந்து பாகமாக நடக்கும் பணியில், இரண்டு பாகம் நிறைவடைந்துள்ளது. மீதி பணி முடிய சில மாதங்கள் ஆகலாம். இவ்வாறு கூறினார்.