கிருஷ்ணகிரி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், காட்டிநாயனப்பள்ளி திம்மராயசுவாமி கோவிலில், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள, 6 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளியில், அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், காட்டிநாயனப்பள்ளி திம்மராயசுவாமி கோவிலில், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதியதாக கட்டப்படவுள்ள, 6 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளுக்கு குத்துவிளக்கு ஏற்றி, பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி வசதி இல்லாத, கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், பணியாளர்களுக்கு, 20 கோடி ரூபாய் மதிப்பில், 100 குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி ஹிந்து அறநிலையத்துறை, தர்மபுரி இணை கமிஷனர் மண்டலத்தில், கிருஷ்ணகிரி உதவி கமிஷனர் பிரிவிற்கு உட்பட்ட காட்டிநாயனப்பள்ளி, போகனப்பள்ளி, திம்மராயசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், 6 குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.அதேபோல முக்கிய கோவில்களில் மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தியடைந்த, 2,000 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 37 மூத்த தம்பதியருக்கு, ஹிந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.ஹிந்து சமய அறநிலையத்துறை, தர்மபுரி இணை கமிஷனர் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி உதவி கமிஷனர் ராமுவேல், கோவில் செயல் அலுவலர் சித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.