பாலக்கோடு: பாலக்கோடு பேரூராட்சியில், போக்குவரத்திற்கு இடையூராக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியிலுள்ள ஸ்துாபி மைதானம் முதல், கல்கூடஅள்ளி மேம்பாலம் வரை, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், கட்டப்பட்டுள்ளன. மேலும், சாலையோர கடைகள் மற்றும் ஆட்டோக்கள், மினி லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் ஆகியவை, வாகன நெரிசலில் சிக்கி, போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல், எம்.ஜி.,ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காலை முதல் இரவு வரை பைக்குகள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல கூட இடமில்லாத நிலை உள்ளது. இதில், பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருவதால், பாலக்கோடு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது. எனவே, பேரூராட்சி நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.