| ADDED : மார் 25, 2024 12:19 AM
கோத்தகிரி;கோத்தகிரி எச்.ஆர்.எம்., நினைவு மெட்ரிக் பள்ளியில், கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு சார்பில், உலக தண்ணீர் தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது.பள்ளி முதல்வர் ஜெயராமன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார். 'லாங்வுட்' சோலை பாதுகாப்புக்குழு செயலர் ராஜூ கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:நடப்பாண்டு தண்ணீர் தினத்தை, ஐக்கிய நாடுகள் சபை, 'அமைதிக்கான நீர்' என்ற தலைப்பை கருப்பொருளாக கொடுத்துள்ளது. தற்போது, நாட்டில், 100 லிட்டர் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொண்டால், நமது பயன்பாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெறும், ஐந்து சொட்டுகள் தான். இந்த குறைந்த அளவு தண்ணீருக்காக தான் உலகெங்கிலும் போராட்டம் நடக்கிறது. மூன்றாவது உலகப்போர் என்று வந்தால், அது தண்ணீருக்காக தான் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றம் காரணமாக, கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையும்போது, உணவு உற்பத்தி குறையும். இதனால், உணவு ஏழைகளுக்கு எட்டா கனியாகும். ஒவ்வொரு சொட்டு நீரும் உயிர் நீர் என்பதை மக்கள் புரிந்துகொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, 'கீ ஸ்டோன்' அமைப்பின் களப்பணியாளர் விக்னேஷ் வரவேற்றார். மோனிஷா நன்றி கூறினார்.