| ADDED : மே 24, 2024 07:09 AM
மகுடஞ்சாவடி : இடங்கணசாலை நகராட்சி, 5வது வார்டு, மன்னாதகவுண்டனூரில் சிலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு, அப்பகுதியில் குடிநீர் இணைப்பை துண்டிக்க, நகராட்சி அலுவலர்கள் முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து அவர்கள் கூறியதாவது: இதே வார்டின் பிற பகுதிகளிலும் பலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இங்கு மட்டும் உடனே இணைப்பை துண்டிக்க முயற்சிப்பது ஏன்? தேர்தல் பிரசாரத்தின்போது, நாமக்கல் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை முற்றுகையிட்டு, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார் அளித்தோம். அதனால் எங்கள் பகுதியில் மட்டும் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து நகராட்சி அலுவலர்கள், 'குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது' என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.