| ADDED : மார் 16, 2024 11:30 PM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் 162 பதட்டமான ஓட்டுச்சாவடி கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ல் துவங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28, திரும்பப் பெற மார்ச் 30. ஓட்டுப்பதிவு ஏப்ரல் 19, ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி 2 எம்.எல்.ஏ., தொகுதியும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்புத்துார், சிவகங்கை, மானாமதுரை என 4 எம்.எல்.ஏ., தொகுதியும் உட்பட மொத்தம் 6 தொகுதியில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். 1873 ஓட்டுச்சாவடிகள்உள்ளது. இதில் 162 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள்பயன்படுத்தும் வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக 155 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்தில் தேர்தல்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரம் செயல்பட துவங்கியுள்ளது. தேர்தல் குறித்த புகாரை 1950, 04575- 240455, 04575 -240465, 04575 -240475, 04575- 240485, 1800 425 7036 என்ற எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்நேரமும் தெரிவிக்கலாம் என்றார்.