| ADDED : ஜன 26, 2024 05:27 AM
காளையார்கோவில்: காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாநாடு நடைபெற்றது.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட அளவில் உள்ள 1,117 அரசு பள்ளிகளில் அமைந்துள்ள பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மாணவர் சேர்க்கையை தக்கவைத்தல், கற்றல் கற்பித்தல் மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்து பேசினர்.கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை அருகே இடையமேலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளி, கீழடி அரசு மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கு கலெக்டர் சிறப்பு கேடயத்தை பரிசாக வழங்கினார். இப்பள்ளி மேலாண்மை குழு மூலம் 11 ஆயிரத்து 184 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, புனித மைக்கேல் கல்வி குழும செயலர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவகோட்டை செந்தில்குமரன், சிவகங்கை புவனேஸ்வரன், உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.