தேனி, : 'காங்., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.' என, பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் தெரிவித்தார்.தேனியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்., தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி தேசத்தை மீண்டும் பிளவு படுத்துகிற அடிப்படையில் மதம், ஜாதியை மையப்படுத்தி வெளியிட்டுள்ளனர். அதாவது மக்களின் செல்வங்களை மீட்டெடுத்து சிறுபான்மை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மக்களுக்கு பிரித்து தருவோம் என கூறியுள்ளனர். மக்கள் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் நகை, உடைமைகள், சொத்துக்கள் வைத்திருந்தால் அதிக வருமானம் கிடைத்தால், அதெல்லாம் மீட்டெடுத்து சிறுபான்மையினருக்கு கொடுப்போம் என தெரிவித்துள்ளது அபத்தம். அவர்கள் எந்த அடிப்படையில் பிரித்து தருவோம் என கூறாமல் கண்மூடி தனமாக தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழ்மையில் உள்ள, சமூகத்தில் விழிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு பிரித்து வழங்குவோம் என்ற தெளிவு கூட அதில் இல்லை. இதனால் ஓட்டு வங்கி அரசியலை மையப்படுத்தி காங்., தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 'ராபின் ஹூட்' படத்தில் வருவது போல் ஒருவரிடம் பணத்தை கொள்ளையடித்து, மற்றொருவருக்கு தரும் அபாயமாக பார்க்கிறோம். நடந்து முடிந்த தேனி லோக்சபா தேர்தலில் ஆளும் தி.மு.க.,வினர் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், பா.ஜ., கட்சியின் ஓட்டுக்களை திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இதுகுறித்து ஆர்.டி.ஐ., மூலமாகவும், அந்தந்த தேர்தல் அலுவலர்களிடம் புகார் மனு அளித்து விபரங்கள் கேட்க உள்ளோம். காங்., தேர்தல் அறிக்கையை இந்திய அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானதாகவே பா.ஜ., பார்க்கிறது, என்றார்.