உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆதரவற்று சுற்றித்திரிந்த 170 பேர் குடும்பத்தினருடன் இணைப்பு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

ஆதரவற்று சுற்றித்திரிந்த 170 பேர் குடும்பத்தினருடன் இணைப்பு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

தேனி: மாவட்டத்தில் ஆதரவற்று சுற்றித்திரிந்தவர்களை அவசர கால ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் மூலம் மீட்டு 170 பேர் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.' என, பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ்.குமார் தெரிவித்தார்.கடந்த 1916ல் ஏப்ரல் 10ல் துவங்கப்பட்ட பெரியகுளம் அரசு மருத்துவமனை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பென்லாண்ட் என்பவரால் திறக்கப்பட்டது. 1922ல் பிரிட்டன் இளவரசர் வேல்ஸ் இணைக்கப்பட்டு, 'பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' மருத்துவமனை என பெயரிடப்பட்டது. தற்போது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்ந்து நுாற்றாண்டுகளை கடந்த மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இங்கு தற்போது 296 படுக்கை வசதிகள் உள்ளன. நாள்தோறும் புற நோயாளிகள் 1300 பேரும், உள்நோயாளிகளாக 250 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவமனையின் வளர்ச்சித் திட்டங்கள், கூடுதல் வசதிகள், விரிவாக்கப் பணிகள், புதிய சேவைகள் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:ரத்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து?மாதம் 100 யூனிட் ரத்த தானத்தில் பெற்று இங்கு நடக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துகிறோம். மீதியுள்ள யூனிட் ரத்த மாதிரிகள் தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கிறோம். மாதத்திற்கு 5 முகாம்கள் நடத்தி, ரத்தக் கொடையின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி, கல்லுாரிகளிலும் அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மருத்துவமனையில் அவசர கால மறுவாழ்வு மையத்தின் (இ.சி.ஆர்.சி.,) செயல்பாடுகள் பற்றிதமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட 5 மையங்களில் இதுவும் ஒன்று. இம்மையம் துவக்கப்பட்ட நோக்கம் சமூகத்தில் ஆதரவற்ற சூழ்நிலையில் வயதானவர்கள், பெண்கள், சிறார்கள் சுற்றித்திரிந்தால், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு, அவர்களை சுகாதாரமான முறையில் கவனித்து, மனநல டாக்டர்கள் மூலம் உடல்நிலை, மனநிலையை ஆய்வு செய்து, விருப்பத்தின் அடிப்படையில் உறவினர்களுடன் இணைத்து வைக்கிறோம். இந்த மையத்தில் தற்போது 60 பேர் பராமரிப்பில் உள்ளனர். டாக்டர் ராஜேஷ் தலைமையில் ஆதரவற்றவர்களை குணமடைய செய்து, உறவினர்கள், குடும்பத்தினர் இல்லாதவர்களுக்கு சுய வருவாய் ஈட்டுவதற்காக சுய தொழில் பயிற்சி வழங்கி வருகிறோம். இதில் 300 பேர் பயனடைந்துள்ளனர். 170 பேர் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. 130 பேர் தொண்டு நிறுவனங்களிடம் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒப்படைத்து பராமரிக்கப்படுகின்றனர். மேலும் ஆதரவற்றவர்கள் மையத்தின் சேர்க்கப்பட்டு குணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.சீமாங் சென்டர் செயல்பாடுகள் பற்றிமாதந்தோறும் 180 முதல் 200 பிரசவங்கள் நடககின்றன. இதில் சிசேரியனும் அடங்கும். இம்மையம் செயல்படுவதால் கிராமப்புறங்களில் வீடுகளில் பிரசவம் நடைபெறுவதில்லை. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிக்கலான பிரசவங்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு பச்சிளங்குழந்தை பராமரிப்பு சிகிச்சை மையம் மூலம் 30 சிசுக்களுக்கும், சிசுக்களின் தாய்களுக்கும் ஒரே நேரத்தில் கண்காணித்து காப்பாற்றப்படுகின்றனர். தற்போது பச்சிளங்குழந்தை பராமரிப்பு சிகிச்சை மையம் மூலம் 30 சிசுக்கள் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இம்மையத்தால் கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.டிஜிட்டல் எக்ஸ்ரே பயன்கள் பற்றிமாவட்டத்தில் வேறு எங்கும் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எக்ஸ்ரே படங்கள் வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பப்படும். பிலிம் தேவைப்படுவோருக்கு மட்டுமே வழங்கப்படுவதால், அரசின் செலவினம் மிச்சமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இலவசம் என்பதால் அதிகமானோர் பயன் பெறுகின்றனர்.சி.டி., ஸ்கேன் சென்டரில் நோயாளிகள் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்க படுகின்றனர் என குற்றச்சாட்டு உள்ளதேமுற்றிலும் தவறான தகவல். ஏனெனில் கதிரியக்கத்தில் பணிபுரியும் டாக்டர்களுக்கு 12 மாதங்களில் ஒரு மாதம் மட்டும் அதாவது 30 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்பது மருத்துவத்துறை விதிமுறைகளில் உள்ளது. கதிரியக்க தொழில்நுட்ப மருத்துவம் படித்த டாக்டர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் குறைக்க கூடாது. இதனால் அந்த 30 நாட்களில் மருத்துவக் கல்லுாரிக்கு பரிந்துரைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்விஷயத்தில் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க, வேறு டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உத்தரவில், துறை இயக்குனரகத்திற்கு பரிந்துறைத்துள்ளோம். மேலும் மாதத்திற்கு சாராசரியாக 300 முதல் 400 பேர் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டு, பயனடைகின்றனர். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் 50 பேர் பயனடைகின்றனர்.தாய்' திட்டம் விரிவாக்கப்பணிகள், சேவைகள் குறித்து?விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் திட்டமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மூலம் பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனையில் மையத்தில் 'கோல்டன் ஹவர்ஸ்' என்றழைக்கக்கூடிய நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 50 உயிர்கள் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர். இதில் கூடுதல் விரிவாக்கப்பணியாக இணை இயக்குனர் பரிந்துரையில் ரூ.6.5 கோடி ரூபாயில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்காக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மையம் 2025 ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி