| ADDED : ஜன 11, 2024 04:29 AM
சின்னமனுார், : குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் வசதி மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. சுயம்புவாக சனீஸ்வரர் இங்கு சுரபி நதிக்கரையில் எழுந்தருளியுள்ளார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் பக்தர்கள் திரளாக வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்படும். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் திருவிழா விமரிசையாக நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.பெண்களுக்கு கழிப்பறை வசதி போதியளவில் கிடையாது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இங்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்ய வாகன நிறுத்துமிடம், பஸ் ஸ்டாண்ட், கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும்.கோயிலிற்கு செல்லும் முன் பக்தர்கள் சுரபி நதியில் குளித்து செல்கின்றனர். அந்த இடத்தில் பெண்கள், ஆண்களுக்கும் தனித் தனியாக குளிக்க வசதி செய்ய வேண்டும். அந்த இடத்தில் உடை மாற்றும் அறைகள் அமைக்க வேண்டும். பிரசித்தி பெற்ற ஆன்மிக தலத்திற்கு ஹிந்து சமய அறநிலைய துறை சிறப்பு வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து செல்ல முடியும்.