| ADDED : ஆக 13, 2024 07:08 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலை நகர ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்- 2022-- 23ம் கீழ், 2.06 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் டிஜிட்டல் நுாலகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நுாலகத்தில் அனைத்து வித போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு, தேவையான புத்தகங்கள் மற்றும் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன், மாவட்ட எஸ்.பி., சீனிவாசாபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திருத்தணி அறிவுசார் மைய கட்டடத்தை திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் அருள் நன்றி கூறினார்.