உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெரியதாமரை - மாமனிக்கால் ஏரி இணைப்பு திட்டம்...கிடப்பில்!:

பெரியதாமரை - மாமனிக்கால் ஏரி இணைப்பு திட்டம்...கிடப்பில்!:

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம் அறிவிப்புடன் நின்றுபோனதால், கிராமவாசிகள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வாயலுார் கிராமத்தில், 172 ஏக்கர் பரப்பில் பெரியதாமரை, 210 ஏக்கர் பரப்பில் மாமனிக்கால் ஏரி ஆகியவை அமைந்து உள்ளன. இந்த இரு ஏரிகளுக்கு இடையே, 50 ஏக்கர் பரப்பில் தனியார் விவசாய நிலங்கள்உள்ளன .பெரியதாமரை ஏரியை ஒட்டி, 32 ஏக்கர் பரப்பில் சின்னதாமரை ஏரி ஒன்றும் உள்ளது.மேற்கண்ட மூன்று ஏரிகளிலும் தேங்கும் தண்ணீர் சுற்றியுள்ள, திருவெள்ளவாயல், செங்கழனீர்மேடு, ஊரணம்பேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்கின்றன. விவசாயிகள் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிரிடுகின்றனர்.இந்நிலையில், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், ஏரிகளில் கூடுதல் தண்ணீரை சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையிலும், பெரியதாமரை, சின்னதாமரை, மாமனிக்கால் ஆகிய மூன்று ஏரிகளையும் இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்குவது தொடர்பாக, 2021, ஜூனில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழகத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, உடனடியாக பணிகள் துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதற்கான எந்தவொரு பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.பெரியதாமரை- மாமணிக்கால் ஏரிகள் இணைத்து, நீர்தேக்கமாக மாற்றும் திட்டம் அறிவிப்புடன் நின்று போனதால், கிராமவாசிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகள், 68 கோடி ரூபாய் செலவில் நீர்தேக்கமாக மாற்றப்பட்டதால், தற்போது கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடிகிறது.அதேபோன்று, அருகருகே உள்ள மேற்கண்ட மூன்று ஏரிகளையும் இணைப்பதன் வாயிலாக, 0.30 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இது தற்போது தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவைவிட, 10 மடங்கு அதிகமாக சேமிக்க முடியும். இதனால் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன்பெறும்.தற்போது குடிநீர் தேவைக்காக, 12 கி.மீ., தொலைவில் உள்ள சிறுவாக்கம் கிராமத்தில் ஆழ்துளை மோட்டார் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.நீண்ட துாரத்தில் இருந்து, பைப்லைன் வாயிலாக கொண்டு வரப்படுவதால், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பாதிக்கிறது. கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.மேற்கண்ட ஏரிகளை நீர்தேக்கமாக மாற்றும்போது, தேங்கும் தண்ணீரை சுத்திகரித்து கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.வெறும் அறிவிப்புடன் நின்றுபோன மேற்கண்ட நீர்தேக்க திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு கவனம் செலுத்திட வேண்டும்இவ்வாறு அவர்கள்கூறினர்.இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேற்கண்ட ஏரிகளை இணைத்து, நீர்தேக்கமாக மாற்றுவது தொடர்பான, முன்மொழிவு அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. இதில், பெரியதாமரை - மாமனிக்கால் ஏரிகளுக்கு இடையில், 50 ஏக்கர் பரப்பில் தனியார் நிலங்கள் உள்ளன. அவற்றை கையப்படுத்த வேண்டும். நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு பெற வேண்டும். உரிய இழப்பீடு வழங்கி பணி மேற்கொள்ள வேண்டும். இதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளோம். ஏரிகள் இணைத்து நீர்தேக்கமாக மாற்றும்போது நிச்சயம், சுற்றியுள்ள கிராமங்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். விரைவில் அதற்காக திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை