உடுமலை;உடுமலையில், அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், வீடுகளுக்குள் புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகின்றன.நேற்று முன்தினம் இரவு, உடுமலை, கொழுமம் ரோடு, பி.வி., லே - அவுட்டைச்சேர்ந்த சாந்தாமணி, 52, வீட்டை பூட்டிவிட்டு, எலையமுத்துார் பிரிவிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.நள்ளிரவில், வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், படுக்கை அறையிலிருந்த பீரோவையும் உடைத்து, உள்ளிருந்த, 42.5 பவுன் தங்க நகை மற்றும், 1.50 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.அதே போல், தி.மு.க., வைச்சேர்ந்த, கணக்கம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கர், 30, அவரது வீடு, கணேசாபுரம் ஆர்.ஜி., நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டுக்கதவு, பீரோவை உடைத்து, 36 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது.மேலும், இதே பகுதியிலுள்ள பாக்கியம், 40, என்பவரது வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், 1.5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.கடந்த வாரம், கணக்கம்பாளையம் ஊராட்சி, ஜீவா நகர் பகுதியில், அடுத்தடுத்து மூன்று வீடுகளிலும் திருட்டு சம்பவம் நடந்தது.உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில், பூட்டியிருக்கும் வீடுகள், வீடுகளில் ஆட்கள் இருந்தால், கட்டி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் மற்றும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி என குற்றச்செயல்கள் அதிகளவு நடந்து வருகிறது.இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், திருட்டை மறைப்பதற்கு பதில், வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.