| ADDED : ஏப் 27, 2024 12:25 AM
உடுமலை;உடுமலை நகரில், சிதிலமடைந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகளை சீரமைக்காமல் இருப்பதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.உடுமலை நகரில், 2015ம் ஆண்டு பாதாளச்சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, இணைப்புகள் வழங்கப்பட்டது.தனித்தனி பகுதிகளிலிருந்து, கழிவுநீர் செல்வதற்கான இணைப்பு வழங்கப்பட்டு, மையப்பகுதியில் அனைத்தும் ஒருங்கிணைத்து கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.இவற்றில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்வதற்கு, ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு மூடிகள் போடப்பட்டுள்ளன. நகரின் ரோடுகள் அடிக்கடி சீரமைக்கப்படுகிறது.ஆனால் அதிலுள்ள குழிகள் சிதிலமடைந்து, இடிந்து, ரோட்டிலிருந்து உள்இறங்கியும் என பகுதிகளில் மோசமான நிலையில் உள்ளது. உடுமலை பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, சரவணா வீதிகளில் குழிகளின் மூடிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன.சில பகுதிகளில், அவற்றை சுற்றியுள்ள ரோடு பகுதிகளும் சேதமடைந்து, உள் இறங்கி உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவால் தடுமாறுகின்றனர்.புதிதாக ரோடு போடப்பட்டுள்ள பகுதிகளில், இக்குழிகள் இருப்பதை கண்டறிய முடியாத வகையில், எந்த அடையாளமும் இல்லாமல் உள்ளன.பொதுமக்கள் நாள்தோறும் இப்பிரச்னையால், விபத்துக்குள்ளாவதை கண்டும் காணாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது.விபத்துகள் உயிர்பலியாக மாறுவதற்கு முன்பாக, ஆள் இறங்கு குழிகளை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.