மேலும் செய்திகள்
செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
8 minutes ago
மதுரை: பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ஜெயபாலனுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், 'புகாரை முடித்து வைத்தது முறையல்ல. மறு விசாரணை நடத்தி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.,) பணிக்கு எதிராக தென்காசி புது பஸ் ஸ்டாண்டில் நவ., 11ல் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ஜெயபாலன்,''உங்கள் ஓட்டுக்களை பறிக்க துடிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் இன்னொரு நரகாசுரன். அவரை தீர்த்துக் கட்டினால்தான் தமிழகம் நன்றாக இருக்கும்,'' என ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அங்கு கூடியிருந்த மக்களிடையே கலவரத்தை துாண்டி, பொது அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில் அரசுக்கு எதிராக பேசியுள்ளார். அதை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலர், தென்காசி எஸ்.பி., மற்றும் டவுன் போலீசாருக்கு புகார் அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் : தென்காசி மாவட்ட பா.ஜ., தலைவர் போலீசாருக்கு புகார் அனுப்பினார். மனுவை ஏற்றுக் கொண்டதற்கு ரசீது வழங்கப்பட்டது. குற்றவழக்குகள் தொடர்புத்துறை துணை இயக்குனரிடம் கருத்து கோரப்பட்டது. அதனடிப்படையில் புகாரில் மேல்நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என விசாரணை முடித்து வைக்கப்பட்டது. தேவையெனில் கீழமை நீதிமன்றத்தில் தனி நபர் வழக்கு தாக்கல் செய்யலாம். இந்த ஒரே சம்பவத்திற்கு 31 புகார்கள் டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி.,க்கு வந்தன. ஒரே சம்பவத்திற்கு பல்வேறு வழக்குகள் பதிய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்: வெறுப்பு பேச்சுக்கு எதிராக வழக்கு பதிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணை நடத்தவில்லை. நீதிபதிகள்: புகார்தாரரிடம் விசாரிக்காமல் குற்றவழக்குகள் தொடர்புத்துறை துணை இயக்குனரிடம் ஒப்புதல் பெற முடியாது. புகாரை முடித்து வைத்தது முறையல்ல. முதற்கட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புகாரின் மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து போலீஸ் தரப்பில் டிச., 10 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
8 minutes ago