கூட்டு பட்டாவில் சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குவதில் கவனம் தேவை!
தமிழகத்தில் ஒரு காலத்தில் பழைய பத்திரம் இருந்தால் போதும், அதை பயன்படுத்தி சொத்து பரிமாற்ற புதிய பத்திரம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனால், பழைய பத்திர பிரதி இருந்தால் போதும், யாருடைய சொத்தையும் யார் பெயரில் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நாளடைவில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்கள் காரணமாக பத்திரப்பதிவில் மக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில் பட்டா இல்லாத சொத்துக்கள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது மிக முக்கிய விஷயம். இதிலும், ஆரம்ப காலத்தில் ஒரு சொத்துக்கு பட்டா இருந்தால் போதும், அது கடைசியாக பதிவு மேற்கொண்ட உரிமையாளர் பெயரில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதனால், பழைய உரிமையாளர் பெயரில் இருக்கும் பட்டாவை பயன்படுத்தி, சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இதிலும், பல்வேறு முறைகேடுகள் வந்துள்ள நிலையில், விற்பவர் பெயரில் பட்டா இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவுக்கு தாக்கலாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் இதற்கான உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சொத்தை பணம் கொடுத்து வாங்கும் மக்கள் அதற்கு பட்டா இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என அமைதியாகிவிட கூடாது. குறிப்பாக அந்த சொத்துக்கான பட்டா கடைசியாக யார் பெயரில் கொடுக்கப்பட்டது என்பதை துல்லியமாக விசாரிக்க வேண்டும். இதில், தற்போது விற்பவருக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் கூட்டு பட்டாவாக இருந்தால், புதிதாக சொத்து வாங்குவோர் பெயருக்கு மாற்றும் போது பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. கூட்டு பட்டாவில் இருக்கும் பழைய உரிமையாளர் பெயருக்கு ஒதுக்கப்பட்ட அளவு என்ன என்று பாருங்கள். அந்த அளவுக்கான நிலம், தற்போது நடக்கும் பரிமாற்றத்துக்கான பாகத்தின் அளவுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள். இதில் அளவுகள் மாறி இருந்தால், கூட்டுப்பட்டா சொத்தை முழுமையாக அளந்து அனைவருக்குமான பாகத்தை சரி பார்க்க வேண்டும். குறிப்பாக, கூட்டுப்பட்டாவில் இருப்பவர்கள் ஒருமுறை சொத்தை விற்பதுடன், வேறு நபருக்கும் அதே பட்டாவை அடிப் படையாக வைத்து போலி ஆவணம் தயாரித்து விற்க வாய்ப்புள்ளது. இதில் தனி பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது விசாரணை நடைமுறைகள் சற்று எளிதாக இருக்கும். ஆனால், கூட்டு பட்டா வில் இருந்து பிரிக்கப் படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், அதை பெறும் நபர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, கூட்டுப்பட்டாவில் இருந்து பிரியாத நிலையில் அந்த சொத்துக்களை வாங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள். தற்போது விற்பவருக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் இருக்கும் பட்டா, கூட்டு பட்டாவாக இருந்தால், புதிதாக சொத்து வாங்குவோர் பெயருக்கு மாற்றும் போது பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.