உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வன்முறை: காங்., - எம்.எல்.சி., பேச்சால் சர்ச்சை

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வன்முறை: காங்., - எம்.எல்.சி., பேச்சால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று, அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியது, சர்ச்சைக்கு காரணமானது.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: பாபர் மசூதியை இடித்தது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவாகியிருந்தது. இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.தன்னார்வ சேவகர் என கூறி குற்ற வழக்குகளில் இருந்தவர்களை விட்டுவிட முடியாது. வழக்குப் பதிவானதால் தலைமறைவாக நடமாடுகின்றனர். சட்டவிரோத செயலை செய்தவர்கள், தர்மத்தின் பெயரில் என்னென்ன செய்தனர் என்பது தெரியும்.ஏற்கனவே மாநில மக்கள், சரியான தீர்ப்பை அளித்துள்ளனர். கர்நாடகாவை அமைதி பூங்காவாக வைத்திருப்போம் என, தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியிருந்தோம். அந்த அமைதியை பாழாக்கும்போது, போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. 30 ஆண்டுகளாக இவர்களை விட்டு வைத்ததே தவறு.தன்னார்வ சேவகர்கள் மீது, பதிவான வழக்கை திரும்பப் பெறும்படி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தாகும்.ராமர் கோவிலுக்கும், அயோத்தி வரலாற்றுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. நான் ஒரு ஹிந்துவாக கூறுவதானால், ஆன்மிக குரு ராமர் கோவிலை திறந்து வைத்தால், அழைப்பு இல்லாமலேயே நாங்கள் சென்றிருப்போம். பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி. அவர் ஆன்மிக குருவா?அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று வன்முறை நடக்கும் வாய்ப்புள்ளது. சரியான தகவலை வைத்துக்கொண்டே, நான் கூறுகிறேன். அயோத்திக்குச் செல்லும் மக்களுக்கு, அரசே பாதுகாப்பு அளிக்க வேண்டும்.யார், யாரை என்னவென்று அழைக்கின்றனர் என்பது முக்கியம் அல்ல. அனைவருக்கும் பக்தர்கள் உள்ளனர். கைலாச ஆஸ்ரமத்தின் நித்யானந்தாவுக்கும், பக்தர்கள் உள்ளனர். அதே போன்று முதல்வர் சித்தராமையாவுக்கும் பக்தர்கள் உள்ளனர். இதை பொருட்படுத்த வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஹரி பிரசாத் பேச்சை, பா.ஜ., தலைவர்கள் கண்டித்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும், 22ல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு ஹரிபிரசாத்தே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவோம். இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷனரிடம் முறையிடுவோம். ஹரிபிரசாத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொறுப்பான பதவியில் உள்ள அவர், இதுபோன்று பேசுவது தவறு.

- -சதானந்தகவுடா, பா.ஜ., - எம்.பி.,

கோத்ரா அசம்பாவிதம் போன்று, மீண்டும் நடக்கலாம் என, ஹரிபிரசாத் கூறியுள்ளார். ஆனால் ராம பக்தர்களை, ராமனே காப்பாற்றுவார். இத்தகைய மிரட்டல்களுக்கு, ராம பக்தர்கள் பயப்படமாட்டார்கள்

- கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை