| ADDED : ஆக 22, 2024 03:43 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே, பொதியாமூப்பனுாரில் பிரசித்தி பெற்ற தம்பிகலை அய்யன் கோவில் உள்ளது. நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி, 13ல், கோவில் வளாகத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி, தினமும் தம்பிகலை அய்யன், கருப்புசாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று, வன பூஜை, கஞ்சி விளையாட்டு நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில் பெரிய பானையில், கஞ்சி காய வைத்து, தென்னை மரத்தின் பாலையில் நனைத்து சுடுகஞ்சியை கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் மீது தெளித்தனர். இதனால் பக்தர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த கஞ்சி உடலில் படுவதால், நோய்கள் குணமாகவும், திருமணம் நடக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பரனேறுதல் நிகழ்ச்சி நடந்தது.இதில் பூசாரிக்கு அருள் வந்து, பக்தர்கள் வழங்கிய ஒரு பன்றியை பலி கொடுத்து, அதிலிருந்து ரத்தத்தில் வாழை பழத்தை நனைத்து, திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஆறு பேருக்கு, அந்த பழத்தை வழங்கினார். அவர்கள் பழத்தை சாப்பிட்டனர். இந்நிகழ்வில் அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடலில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.