ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அட்டகுறுக்கி கிராமத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் இயங்குகிறது. இங்கு கடந்த ஓராண்டிற்கு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் மின்மோட்டார் ஆகியவற்றை சிலர் திருடி சென்றனர். நிறுவன மேலாளர் செல்வராஜ், 43, சூளகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேபோல், தனியார் நிறுவனங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது.இந்நிலையில், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், சூளகிரி பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, ஓசூர் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த பேரரசு, 19, மாரிமுத்து, 20, உத்தனப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த முருகேசன், 30, ஆகிய, 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், சூளகிரி பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்களுக்குள் புகுந்து, காப்பர் ஒயர்கள், மின் மோட்டார்களை திருடி, உத்தனப்பள்ளி அருகே கூத்தனப்பள்ளியை சேர்ந்த இரும்பு கடை நடத்தி வரும் பூ சங்கர், 38, என்பவரிடம் அவர்களிடம் விற்றது தெரிந்தது. இதனால், பூ சங்கர் உட்பட, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருட்டு பொருட்களை விற்று வைத்திருந்த, 3.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.