| ADDED : ஏப் 18, 2024 06:12 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்திற்கு கோடை துவங்கியதும் குளுமையை தேடி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்புவதற்கு அண்டை மாநிலங்களான தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகள் வந்து செல்வதால் கோடை சுற்றுலா சீசன் களை கட்ட துவங்கியது.அதனை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தில் சுற்றுலாதுறைக்குச் சொந்தமான முக்கிய சுற்றுலா பகுதிகளை கடந்த ஏப். ஒன்று முதல் ஏப்.14 வரை 1,45,981 பயணிகள் ரசித்தனர்.அதில் மிகவும் கூடுதலாக வாகமண் அட்வஞ்சர் பூங்காவை 53,295, வாகமண் மலை குன்றை 36,915 பயணிகள் ரசித்தனர்.தவிர மாவட்டத்தில் வனம், மின்வாரியம் ஆகியவற்றிற்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் ஏராளம் சென்றனர். அதேபோல் கோடை சீசனுக்காக இடுக்கி அணையை காண மே 31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தினமும் 850 பயணிகள் மட்டும் அனுமதிக்கின்றனர்.ரோஸ் பெஸ்ட்: மூணாறில் அரசு தாவரவியல் பூங்கா, வாகமண் அட்வஞ்சர் பூங்கா ஆகியவற்றில் ரோஜா பூக்களின் கண்காட்சியான' ரோஸ் பெஸ்ட்' நடப்பதால் பயணிகள் வருகை அதிகரித்ததாகவும், மே 31 வரை பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலாதுறை செயலர் ஜிதிஷ்ஜோஸ் கூறினார்.மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் ஏப்.21ல் ரோஸ் பெஸ்ட் நிறைவு பெறுகிறது. ஏப்.1 முதல் ஏப்.14 வரை சுற்றுலா பகுதிகளுக்கு வருகை தந்த பயணிகள் எண்ணிக்கை., ( மாவட்ட சுற்றுலா துறை கணக்குப்படி)மாட்டுபட்டி அணை 6,655, மூணாறு அரசு தாவரவியல் பூங்கா 23,653, ராமக்கல்மேடு 8578, அருவிகுழி 499, ஸ்ரீ நாராயணபுரம் 3152, வாகமண் மலை குன்று 36915, அட்வஞ்சர் பூங்கா 53295, பாஞ்சாலிமேடு 7497, இடுக்கி ஹில் வியூ பூங்கா 5737.