திருப்பூர் : உயர்கல்வித்துறையின் 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. இதற்காக, உ.பி., வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்சிங் தலைமையில், ஹரியானா குருேஷத்ரா பல்கலைக்கழக பேராசிரியர் சித்தரத சங்கர், குஜராத் பர்தோலி கல்லுாரி முதல்வர் ஜெயந்திபாய் சுரேஷ்பாய் சவுத்திரி ஆகியோர் அடங்கிய தேசிய தர நிர்ணயக்குழுவினர்(நாக் குழு), நேற்று கல்லுாரிக்கு வந்தனர்.கல்லுாரியில் உள்ள, 18 துறைகளின் பேராசிரியர், இணை பேராசிரியர்களிடம், கோவை பாரதியார் பல்கலையின் கீழ் பாடத்திட்டம், கற்றல், கற்பித்தல் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர். ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த விவரம், அவற்றில் எவ்வளவு புத்தகங்களாக வெளிவந்துள்ளன என்பது குறித்து கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டனர்.குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து, இயற்பியல், வேதியியல், ஆங்கில வகுப்புகளுக்கு சென்று 'பவர்பாயின்ட்' உடன் கூடிய வகுப்பறை, ஆசிரியர் - மாணவர் ஒழுக்கம், தேர்ச்சி குறித்து கேட்டு, பதிவு செய்தனர்.ஆய்வு நடத்திய குழுவினர் கூறுகையில், ''தற்போது, கல்லுாரி 'பி' அந்தஸ்தில் உள்ளது. கல்லுாரியின் செயல்பாடுகளை முழுமையாக ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்து, ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம். தேசிய தர நிர்ணயம் உறுதி செய்யப்பட்டால், அது குறித்து முன்கூட்டியே கல்லுாரி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படும்'' என்றனர்.தொடர்ந்து, இன்றும் கல்லுாரியில் தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.---திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நேற்று தேசிய தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
வாழைப்பழம் சூப்பர்
கல்வித்திட்டம், பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை, குறித்து கேட்டறிந்த 'நாக்' குழுவினர், விலங்கியல் துறை சார்பில் மீன் மற்றும் திசுவளர்ப்பு, பறவை பண்ணை உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர். கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை பார்வையிட்டனர். மாணவர் ஒருவர், 'நாங்கள் விளைவித்தது' என வாழைப்பழத்தை, குழுவினரிடம் தர, அதனை வாங்கி சுவைத்து 'சூப்பராக உள்ளது, எப்படி விளைவித்தீர்கள்?' என கேட்டறிந்தனர்.