| ADDED : ஜன 26, 2024 11:46 PM
பல்லடம்: குடிநீர் நீர் கேட்டு, செங்கோட்டம் பகுதி பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.பல்லடம் நகராட்சி, 5வது வார்டுக்கு உட்பட்ட செங்கோட்டம் பகுதியில், கடந்த ஒன்றரை மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. நகராட்சி இது குறித்து கண்டுகொள்ளாத நிலையில், நேற்று மதியம், இப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் பல்லடம்- மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது:கழிவு நீர் கால்வாய் கட்டுவதாக கூறி, குடிநீர் சப்ளையை நிறுத்தி விட்டனர். இதனால், இரண்டு மாதமாக, குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. தற்காலிக நடவடிக்கையாக, லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று கூறினார். ஒன்றரை மாதத்துக்கு முன் ஒரேயொரு லாரி வந்தது. அதன்பின், வரவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த வார்டு கவுன்சிலராகவும், நகராட்சி தலைவராகவும் உள்ள கவிதாமணியின் வார்டில்தான் இந்த அவலம்.ஒன்றரை மாதமாக குடிநீர் இன்றி பொறுத்திருந்து பார்த்து விட்டோம். நாங்கள் ரோட்டுக்கு வந்தால் தான் வீட்டுக்கு குடிநீர் வரும் என்பதால், மறியலில் ஈடுபட்டோம். இனியும் குடிநீர் வரவில்லை எனில், நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால், பெண்கள் கலைந்து சென்றனர். மறியலால், அரை மணி நேரம் மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.