- நிருபர் குழு -உடுமலையில், தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில், இரு இடங்களில், 1.61 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை சட்டசபை தொகுதியில், நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சுந்தரம், போலீசார் கோவிந்தராஜ், சந்தானமாரி தலைமையிலான குழுவினர், பொள்ளாச்சி ரோட்டில், நல்லாம்பள்ளி பிரிவு அருகே, வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல், குரல்குட்டையைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரிடம் ஒரு லட்சத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பறக்கும் படை அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர், உடுமலை நகரப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இல்லாமல், எம்.எம்.வி., லே - அவுட்டைச் சேர்ந்த தவசுமணி என்பவர், 61,300 ரூபாய் கொண்டு வந்ததை, பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி
பொள்ளாச்சி தொகுதியில், விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.அதில், நெகமம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, வாகனத்தில் வந்த திண்டுக்கல் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோபாலபுரம் சோதனைச்சாவடியில், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வாகனத்தில் வந்த பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த ரஷீத் என்பவர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, மூன்று லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.